Ad Banner
Ad Banner
 உலகம்

சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆச்சே

08/12/2025 07:11 PM

ஆச்சே, 8 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா, ஆச்சேவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் மற்றும் நிலச்சரிவால் நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியானதுடன், முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமானதால், தற்போது சுகாதார நெருக்கடி எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.

நவம்பர் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழையால் ஆச்சேவுடன், வட மற்றும் மேற்கு சுமத்ராவில் உள்ள 37 மாவட்டங்களில் மோசமான வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டதாக, இந்தோனேசிய மனிதாபிமான ஒருங்கிணைப்பு தளமான I-எச்-சி-பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அப்பேரிடரில் ஆச்சேவில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதுடன், சாலைகள், பாலங்கள் மற்றும் சுகாதார மையங்கள் போன்ற அடிப்படை வசதிகளும் கடுமையாக பழுதடைந்திருந்தன.

அதுமட்டுமின்றி, வயிற்றுப்போக்கு, டெங்கி காய்ச்சல் மற்றும் தோல் தொற்றுகள் போன்ற நீர் மூலம் பரவும் நோய்களும் அதிகரிக்கும் வாய்ப்பு அங்கு இருந்ததாக இந்தோனேசிய சுகாதார அமைச்சு முன்னதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்காலிக நிவாரண மையங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் போதுமான சுகாதார வசதிகள் இல்லாததால், சிறுவர்கள் மற்றும் முதியவர்களிடையே நோய் பரவும் சாத்தியமும் அங்கு பரவலாகக் காணப்பட்டது.

இந்தோனேசியா முழுவதும் இப்பேரிடரால், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வேளையில், நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணவில்லை.

ஆச்சேவை மீட்கும் வகையில் மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் கடுமையாக உழைத்து வந்தாலும், துண்டிக்கப்பட்ட சாலைகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக அவர்களின் முயற்சிகள் அவ்வப்போது தடைபட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் வழங்குவதற்காக, அனைத்துலக உதவி நிறுவனங்களிடம் இருந்து உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)