கூச்சிங், 21 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மாத தொடக்கத்தில், சரவாக், சந்துபோங், கம்போங் ரம்பாங்கியில் மூன்று வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைதான வாகனம் பழுதுபார்க்கும் பட்டறைத் தொழிலாளரின் வழக்கு விசாரணையின் மறுசெவிமடுப்பு, அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறும் என்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிர்ணயித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை இன்னும் தமது தரப்பு பெறவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் சுவா கய் ஷெங் தெரிவித்ததைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூர்ஷஹிக்கா நஸ்வா ரட்சாலி அந்த தேதியை நிர்ணயித்தார்.
கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஜாலான் சுல்தான் தெஙா, கம்போங் ரம்பாங்கியில் உள்ள வீடொன்றில், இரவு மணி 7.45 அளவில் நூசஹிக்கா சைனுடின் என்ற சிறுமியைக் கொலை செய்ததாக 32 வயதான முஹமட் ஷுக்ரி ரயான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரணத் தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை உட்பட 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் அவர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட அச்சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்டவர் தோழியின் மகளாவார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]