கிள்ளான், 21 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஒருவரின் சடலம் இன்று காலை மணி 10.30 அளவில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷா ஆலம், கம்போங் சுங்கை கண்டிஸ் அருகே அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சஸாலி அடாம் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக அந்த ஆடவரின் உடல், ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இச்சம்பவம் தொடர்பான அண்மைய விவரங்கள் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படும் என்று ஏ.சி.பி சஸாலி கூறினார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் கோலாலம்பூர் சலோமா பாலத்தின் கீழே அகப்பட்டுக் கொண்ட, கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த 37 வயதான கே. சுரேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும், இச்சம்பவத்தில் பாலத்தின் அடியில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]