ஜப்பான், 15 நவம்பர் (பெர்னாமா) -- 2025 ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு நாட்டின் மகளிர் பூப்பந்து இரட்டையர் பெர்லி தான் - எம். தினா தேர்வாகினர்.
இதன் வழி, இப்பருவத்தின் மூன்றாவது பட்டத்தை வெல்லும் இலக்கில் அந்த ஜோடி முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பெர்லி தான் - எம். தினா, உபசரணை நாட்டின் யுகி ஃபுகுஷிமா-மாயூ மட்சுமோதோவுடன் மோதினர்.
கடுமையான போட்டியை சந்தித்த பெர்லி தான் - எம். தினா, நிறைவில் 24-22, 23-21 என்ற புள்ளிகளில் ஆட்டத்தை கைப்பற்றினர்.
இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில், பெர்லி தான் - எம். தினா ஜப்பானின் ரின் இவானகா – கியே நகனிஷி ஜோடியுடன் விளையாடவுள்ளனர்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், நாட்டின் கோ ஸி ஃபெய் – நூர் இசுட்டின் முஹமட் ரூம்சானி ஜோடி, ஜப்பானின் ஹிரோகி மிடோரிகாவா – க்யோஹேய் யமஷிதா இடம் 12-21, 17-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)