Ad Banner
 பொது

சபாவிற்கு 40% சிறப்பு வருவாய் ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பு மேல்முறையீடு செய்யாத காரணம் நாளை தெரிவிக்கப்படும் 

12/11/2025 03:51 PM

புத்ராஜெயா, 12 நவம்பர் (பெர்னாமா) -- சபாவிற்கு 40 விழுக்காடு சிறப்பு வருவாய் ஒதுக்கீடு வழங்குவது என்பது கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனும் அரசாங்கத்தின் முடிவு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார்.

சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கான காரணங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பான மேல்முறையீடு குறித்த விவரமும் அவ்விளக்கத்தில் அடங்கியிருக்கும் என்று நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார். 

இவ்விவகாரம் தொடர்பில் விவாதிக்க நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஒருமித்த கருத்து மற்றும் உடன்பாட்டின் மூலம் அம்முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

''கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பரிசீலிக்க நேற்று அமைச்சரவை ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. பல மணிநேர விவாதங்களுக்குப் பிறகு அமைச்சரவையின் ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் கேட்டறிந்து முடிவு செய்தோம்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பின் போது அவர் அவ்வாறு கூறினார். 

இதனிடையே, மத்திய அரசாங்கத்தின் முடிவிற்கு ஏற்ப சபா மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைச் செயல்முறை உடனடியாகத் தொடங்கப்படும் என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் ஏஜிசி அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)