Ad Banner
Ad Banner
 பொது

பெர்சத்து - பாஸ் உட்பூசல் அரசியல் நிலைத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கும் 

30/12/2025 06:50 PM

கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- பெர்லிஸ் விவகாரத்தை முன்னிறுத்தி பெர்சத்து பாஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவம் தற்போது நிலைக் குலைந்துள்ளது.

MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி மற்றும் கெராக்கான் ஆகியவைப் பெரிக்காத்தான் நேஷனலில் அங்கத்துவம் பெற்றிருந்தாலும் அக்கூட்டணிக்கான பிரதான தீர்மானத்தைத் பெர்சத்து மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளே இணைந்து மேற்கொள்ளும்.

ஆனால், தற்போது அவ்விரு கட்சிகளிடையே ஏற்பட்ட விரிசல் பெரிக்காத்தான் நேஷனலுக்கு மட்டுமின்றி நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம்.  

தொடக்கத்தில் அம்னோவின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் பாஸ் கட்சியின் துணையுடன் இணைந்து முஃவாக்காட் நேஷனல் (MUAFAKAT NASIONAL) என்ற கட்சியைத் தொடங்கினர்.

ஆனால், அக்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட உட்பூசலால் அது களைக்கப்பட்டு பின்னர் பெரிக்காத்தான் நேஷனலாக மாறியது.

ஆளும் அரசாங்கத்தை அவ்வப்போது குறைக்கூறி வந்த அக்கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாகக் களமிறங்க திட்டமிட்டிருந்த வேளையில், டான் ஶ்ரீ முகிடின் யாசின், டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இன்று பதவி விலகி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளருமான முனைவர் கிருஷ்ணன் மணியம் குறிப்பிட்டார். 

"இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு பாஸ் கட்சியின் இளைஞர் தலைவர் உள்ளிட்ட கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கு ஆவலாகக் காத்திருப்பது போல கருத்து வெளியிடுகின்றனர். எனவே, கூட்டணி ஒரு தலைப்பட்சமாகச் செயல்பட்டால் அதில் சிலர் மட்டுமே நன்மை அடைவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

பாஸ் கட்சியின் இந்த அறிவிப்பு நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்குச் சவாலாக உள்ளதோடு பெரிக்காத்தான் நேஷனலுக்குப் பெரும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில் தேசிய முன்னணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனலில் கைக்கோர்க்க விரும்புவதாக ம.இ.கா தலைமைத்துவதில் பேச்சுவார்த்தை வலுத்து வந்த நிலையில் அக்கட்சியும் தற்போது பேராபத்திலிருந்து தப்பித்து கொண்டதாக முனைவர் கிருஷ்ணன் மணியம் விவரித்தார்.  

எனவே, கட்சி ரீதியில் எவ்வித முடிவெடுக்க வேண்டும் என்றாலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஆழமாக உள்வாங்கி அதன் அடிப்படையில் மட்டுமே இறுதி செய்வது விவேகமான ஒன்றாகும் என்று முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்களின் பதவி விலகல் குறித்து பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)