கோத்தா திங்கி,10 நவம்பர், (பெர்னாமா) -- 17-வது சபா மாநில தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து புதிய முகங்கள் களமிறங்குவது மாநிலத் தலைமைத்துவத்தில் மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதற்கான கட்சியின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் பொருத்தமான நடவடிக்கையாகும்.
சபா மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தும் திறன் கொண்ட நம்பத் தகுந்த வேட்பாளர்களை நியமிப்பதில் தேசிய முன்னணி தீவிரமாக இருப்பதை இந்நடவடிக்கை காட்டும் என அம்னோவின் உதவித் தலைவர் டத்தோ செரி முஹமட் காலிட் நொர்டின் தெரிவித்தார்.
"இது, மாற்றத்தைக் கொண்டுவருவதிலும், சபாவில் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டுவரக்கூடிய புதிய மற்றும் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதிலும் தேசிய முன்னணி மிகவும் தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது," என்றார் காலிட் நோர்டின்
இன்று ஜோகூர் கோத்தா திங்கியில் உள்ள ஃபெல்டா லொக் ஹெங் ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு அமைச்சின் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
சபாவின் தேசிய முன்னணி கூட்டணி, தனது 41 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அதில் பெரும்பாலானவர்கள் புதிய முகங்கள்.
இளம் வேட்பாளர்களோடு அனுபவம் நிறைந்த சில தலைவர்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வரும் நவம்பர் 29-ஆம் தேதி சபா மாநில தேர்தல் நடைபெறும்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)