கோலாலம்பூர், 06 ஜனவரி (பெர்னாமா) -- இதனிடையே, நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஐந்து கோடி ரிங்கிட் நிதி வழங்குவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருந்தது, அரசாங்கத்தின் மீதான இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
''நாம் பிரதமருக்கு மனமார்ந்த நன்றியை சொல்ல வேண்டும். ஏனெனில், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அவர் ஐந்து கோடி ரிங்கிட் நிதி வழங்கியிருக்கிறார். 2025-ஆம் ஆண்டில் மேலும் புதிய ஆறு தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கு 3 கோடி ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட நிதியும் வழங்கியிருக்கிறார். இந்த முறை கே.பி.எம் மூலம் இன்னும் 5 கோடி ரிங்கிட்டும் வழங்கப்படும்,'' என டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிதியை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தார் அதை பள்ளியின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும், பி.தி.பி.கே எனப்படும் தொழிற்திறன் கல்வி நிதியை உட்படுத்தி, கூடுதலாகப் பத்து கோடி ரிங்கிட் நிதியை பிரதமர் வழங்கி இருப்பது தொழில்திறன் கல்வி மேம்பாட்டிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
''பி.தி.பி.கே நிறுவனத்தின் கீழ், 10 கோடி ரிங்கிட் திவெட்-க்கு கொடுக்கப்படுகின்றது. அத்தொகை நிதியமைப்புக்காவும் தொழில்முறை பயிற்ச்சிக்காவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திவெட் தொழிலாளர்களும் இளைஞர்களும் பயன் பெறுவர்,'' என டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளதால், அது தொடர்பிலான அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளிலும் இந்திய இளைஞர்கள் திரளாக கலந்து வாய்ப்புகளைப் பெற்று பயன்பெற வேண்டும் என்று ரமணன் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)