கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- பொதுமக்களும் சுகாதாரப் பணியாளர்களும் மருந்துகளின் பக்க விளைவுகளைப் புகாரளிப்பதில், குறிப்பாக நவம்பர் 3 லிருந்து 9ஆம் தேதி வரைக்குமான #MedSafetyWeek 2025 வருடாந்திடப் பிரச்சாரத்தை முன்னிட்டு தீவிரப் பங்காற்றுமாறு சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய மருந்தக சீரமைப்பு பிரிவு, என்.பி.ஆர்.ஏ-வால் ஒருங்கிணைக்கப்பட்ட இப்பிரச்சாரம், உலக சுகாதார நிறுவனம், WHO ஏற்பாட்டிலான உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதில் 117 நாடுகளைச் சேர்ந்த 130 அமைப்புகள் பங்கேற்கின்றன.
மருந்துப் பாதுகாப்பு என்பது மருத்துவர்கள், மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டிய கடப்பாடு என்ற செய்தியை வெளிப்படுத்தவே "மருந்துகளைப் பாதுகாப்பானதாக்க நம் அனைவராலும் உதவ முடியும்" என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் உள்ள மருந்துகள் பாதுகாப்பானதாகவும் ஆற்றல்மிக்கதாவும் இருப்பதை உறுதி செய்வதற்கும், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளைக் கண்டறிந்து புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு மிகவும் முக்கியமானது.
புதிய பக்க விளைவுகள் அல்லது இடர் குறைப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிப்பது போன்ற அண்மைய பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய, பெறப்பட்ட அனைத்து பக்க விளைவு அறிக்கைகளும் பகுப்பாய்வு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)