ஷா ஆலம், 07 நவம்பர் (பெர்னாமா) -- சிலாங்கூர் அரசாங்கம், தனது மாநில மக்களுக்கு இலவச நடமாடும் சுகாதார சேவை முயற்சியாக, AMBULANS KITA SELANGOR, AKS திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலக்கிடப்பட்ட பிரிவினருக்கு சேவை மற்றும் அவசர சிகிச்சைக்கான அணுகல் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மொத்தம் 48 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அவசரகாலங்களில் ஆம்புலன்ஸ் தாமதமாக செல்வதைத் தடுக்க மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
மலேசிய சிலாங்கூர் செயிண்ட் ஜான் ஆம்புலன்சின் வியூக ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
“இது 26 சட்டமன்ற பகுதிகளுக்குப் பயனளிக்கும் என்று நாங்கள் கண்டறிந்தோம். சுங்கை புரோங், இஜோக் ஜெரம் தவிர்த்து, ஶ்ரீ கெம்பாங்கன், கோத்தா அங்கெரிக், பத்து தீகா, கெமுனிங், புக்கிட் காசிங் வரை சுங்கை பெலிக் டன் வரை உள்ளது," என்றார் அவர்.
இன்று, மாநில செயலகக் கட்டிட வளாகத்தில் ஏ.கே.எஸ் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர், அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
ஷா ஆலம் மாநகராண்மை மன்றம், பெட்டாலிங் ஜெயா மாநகராண்மை மன்றம், சுபாங் ஜெயா மாநகராண்மை மன்றம், கோலா லங்காட் மாநகராண்மை மன்றம் மற்றும் கோலா சிலாங்கூர் நகராண்மை மன்றம் ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளில் AKS திட்டம் அமல்படுத்தப்படும்.
AKS திட்டத்தின் வழி, நோயாளிகள் வீட்டிலிருந்து பொது சுகாதார சேவை மையங்களுக்கு இலவசமாக செல்ல ஒரு வழி மற்றும் இருவழி ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)