கோலாலம்பூர், 7 நவம்பர் (பெர்னாமா) -- சிலாங்கூர், பாலாகொங்-இல் உள்ள தாமான் செரி தீமா மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டிருந்த சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, JBPM, நேற்று நள்ளிரவு வெற்றிகரமாக தீயை அணைத்தது.
சுமார் 2.4 ஹெக்டர் பரப்பளவில் பரவி இருந்த தீயை இரவு மணி 9-க்கு கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் பின்னிரவு மணி 12.15-க்கு முழுமையாக அணைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
முதல் மூத்த தீயணைப்பு அதிகாரி ரோடுவான் சுடின் தலைமையில், பன்டார் துன் ஹுசைன் ஓன், செரி கெம்பங்கன், பன்டான் இன்டா, சுங்காய் பேசீ மற்றும் செராஸ் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், பாலாகொங் மற்றும் செர்டாங்-இல் இருந்து இரண்டு உதவி வாகனங்களுடன், 10 உறுப்பினர்கள் அடங்கிய தலா இரண்டு தன்னார்வ தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு உதவியதாக, அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.
பன்டான் இன்டா மற்றும் செராஸ் தீயணைப்பு நிலையங்களிலிருந்து இரண்டு தண்ணீர் டேங்கர் லாரிகள் உட்பட சுங்காய் பேசீ தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு மீட்பு இயந்திரம், FRT-யும் அனுப்பி வைக்கப்பட்டதாக, அவர் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)