ஜாலான் பினாங், அக்டோபர் 25, (பெர்னாமா) -- ஆசியானில் இணைவதற்கான ஆவணத்தையும், தென்கிழக்கு ஆசிய அணு ஆயுதம் இல்லாத மண்டல ஒப்பந்தத்தையும் திமோர் லெஸ்தே அதிகாரப்பூர்வமாக இன்று சமர்ப்பித்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, ஆசியான் வரலாற்றில் ஒரு முக்கியமானது என்பதோடு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து இறையாண்மை கொண்ட நாடுகளும் ஒரே வட்டாரத்தின் கீழ் முழுமையாக இணைந்திருப்பதைக் குறிப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் விவரித்தார்.
"இது திமோர் லெஸ்தே ஆசியானில் பதினொன்றாவது உறுப்பினராக முழுமையாக இணைந்திருப்பதை குறிக்கிறது. மேலும், நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த வட்டாரத்தில் ஒவ்வொரு இறையாண்மை கொண்ட நாட்டையும் உள்ளடக்கிய ஆசியானின் நோக்கத்தின் விரிவாக்கத்தையும் திறம்பட குறிக்கிறது," என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
அந்த வரலாற்றுச் சாதனைக்காக திமோர்-லெஸ்தே அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், ஆசியானில் இணையும் முயற்சியில் திமோர்-லெஸ்தே வெளிப்படுத்திய தைரியம், மனவலிமை மற்றும் ஒருபோதும் மங்காத நம்பிக்கையையும் அவர் பாராட்டினார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)