கோலாலம்பூர், அக்டோபர் 24, (பெர்னாமா) -- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சியின் ஒத்துழைப்புடன் அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கான பொருட்கள், சிஎஸ்ஏம்-ஐ விநியோகித்ததோடு வைத்திருந்த கும்பலின் நடவடிக்கையையும் முறியடித்துள்ளது.
அதோடு, 12 முதல் 71 வயதுக்கு உட்பட்ட 31 பேரையும் கைது செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22-லிருந்து 30-ஆம் தேதி வரை, குற்றப் புலனாய்வுத் துறை, ஜெஎஸ்ஜெ-வின் டி11 பிரிவு தலைமையிலான ஒப் பெடோ பெர்செபாடு பி.டி.ஆர்.எம்–அஸ்.கே.எம்.எம் 2.0 நடவடிக்கையின் வழி இந்த வெற்றி கிடைத்ததாக டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
இது நாடு முழுவதும் 37 இடங்களில், பி.டி.ஆர்.எம் மற்றும் எம்.சி.எம்.சி-இன் 14 பிரிவுகளைச் சேர்ந்த 206 அதிகாரிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது.
இணைய பகுப்பாய்வு, டார்க் வெப் கண்காணிப்பு மற்றும் இணையம் வழியான குழந்தை பாலியல் வன்முறை தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பயனீட்டாளர்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டன.
இன்று, கோலாலம்பூரில், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில்அவ்வாறு கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில், 17 சந்தேக நபர்கள் செப்டம்பர் 24 தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதோடு, மேலும் 14 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)