Ad Banner
 பொது

கோலா லங்காட் புயல்; தற்காலிக நிவாரண மையத்தில் 18 பேர் தஞ்சம்

16/10/2025 04:44 PM

சிலாங்கூர், 16 அக்டோபர் (பெர்னாமா) --  சிலாங்கூர், கோலா லங்காட்டின் கம்போங் மெடான் பகுதியில் நேற்று புதன்கிழமை புயல் காற்று தாக்கியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரை தங்க வைப்பதற்கு பி.பி.எஸ் எனும் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.

மாலை மணி 4.15 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் ஐந்து பள்ளிகள், ஒரு மண்டபம் மற்றும் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடண்டன் முஹமட் அக்மால்ரிசால் ரட்சி தெரிவித்தார்.

சிஜங்காங் ஜெயா இடைநிலைப்பள்ளி, சிஜங்காங் ஜெயா தேசியப்பள்ளி, கம்போங் மெடான் தேசியப்பள்ளி மற்றும் கம்போங் மெடான் ஆரம்ப சமய பள்ளி ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரிடண்டன் முஹமட் அக்மால்ரிசால் ரட்சி கூறினார்.

மேலும், ஜாலான் தஞ்சோங் தேசியப்பள்ளி, சிஜங்காங் சட்டமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகம், பத்து 9 வீடமைப்பு பகுதி உட்பட தாமான் சிஜங்காங் ஜெயா தொழில்துறை பகுதிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்போங் மெடான் ஆரம்ப சமய பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு சீராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

எனினும், அவர்களில் ஐவர் மட்டும் தெலுக் பங்லிமா காராங் சுகாதார சிகிச்சையகத்தில் சிகிச்சைப் பெற்றனர்.

எஞ்சிய அறுவரை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் நிலை பேரிடராக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று உள்கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்திருப்பதாக பதிவாகியுள்ளதாக முஹமட் அக்மால்ரிசால் தெரிவித்தார்.

இதனிடையே, சிலாங்கூர், தெலுக் பங்லிமா காராங்கில் நேற்று மாலை புயலால் பாதிக்கப்பட்ட நான்கு பள்ளிகளில் சுத்தம் செய்தல் மற்றும் சேதத்தைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அவற்றில், சிஜங்காங் ஜெயா இடைநிலைப் பள்ளி, சிஜங்காங் ஜெயா தேசிய பள்ளி தேசிய வகை கம்போங் மெடான் மற்றும் ஜாலான் தஞ்சோங் ஆகிய நான்கு பள்ளிகள் ஆகும்

சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள இடங்கள் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக பழுதுபார்க்கும் முயற்சிகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

கற்றல் செயல்முறையை உறுதி செய்வதோடு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் விரைவில் இயங்கலை வழியான கற்றல் கற்பித்திலைத் தொடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)