பெய்ஜிங், 06 அக்டோபர் (பெர்னாமா) - ஷங்காய் மாஸ்டர்ஸ் பட்டத்தைத் தக்க வைத்து கொள்ளும் யானிக் சின்னரின் கனவு ஈடேறாமல் போனது.
தேலன் கிரிக்ஸ்போர்க்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான சின்னரின் முயற்சி ஏமாற்றத்தில் முடிந்தது.
இவ்வாட்டத்தின் இரண்டாம் சுற்றிலிருந்தே தமக்கு ஏற்பட்ட வலியின் அறிகுறிகளைச் சின்னர் வெளிப்படுத்தத் தொடங்கினார்.
சின்னருக்குத் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணத்தால், 6-7, 7-5, 3-2 என்ற புள்ளிகளுடன் மூன்றாவது சுற்றில் முன்னிலையில் இருந்த கிரிக்ஸ்போர்கைத் தொடர்ந்து எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இவ்வாட்டத்தில் இருந்து சின்னர் விலகியதால் கிரிக்ஸ்போர்க்குச் சாதகமாக நிறைவடைந்தது.
முன்னதாக, சின்னருக்கு எதிரான அனைத்து ஆறு ஆட்டங்களிலும் கிரிக்ஸ்போர்க் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாகக், கணுக்கால் காயம் காரணமாக கார்லஸ் அல்காராசும் இப்போட்டியிலிருந்து விலகியிருந்த வேளையில், தற்போது சின்னர் விலகியிருப்பதால் ஷங்காய் மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு நோவாக் ஜோகோவிச்சுக்குப் பிரகாசமாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், 38 வயதான ஜோகோவிச், யானிக் ஹன்ஃமனை 4-6, 7-5, 6-3 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)