Ad Banner
Ad Banner
 பொது

காசாவுக்கான மலேசியாவின் ஆதரவு 1940-ஆம் ஆண்டிலேயே வேரூன்றியது - ஹசான்

04/10/2025 05:12 PM

சிப்பாங், 04 அக்டோபர் (பெர்னாமா) -- சுதந்திரம் பெறுவதற்கும் இறையாண்மை கொண்ட அரசை உருவாக்குவதற்கும் பாலஸ்தீன மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை மலேசியா உணர்ந்துள்ளதால், உறுதியான ஆதரவை தெரிவித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக போராடும் அரபு லீக் உருவாக்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தீர்மானங்களோடு, 1940-ஆம் ஆண்டிலிருந்தே காசாவுக்கான மலேசியாவின் ஆதரவு வேரூன்றத் தொடங்கியதாக அவர் கூறினார்.

“காசாவில் நீடித்த அமைதிக்கான தொடக்கப் புள்ளி இங்கிருந்து உருவாகிறது. மேலும், பாலஸ்தீன மக்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர அரசைப் பெறுவார்கள்.
40-களில் இருந்து நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். காசாவில் நாம் முன்னுரிமை அளிக்க விரும்பும் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் குண்டுவெடிப்பை நிறுத்துவதும், மனிதாபிமானப் பொருட்களை வழங்குவதும் ஆகும்,“ என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தை பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, காசாவில் அமைதியான தீர்வைக் காணும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றங்களை மலேசியா வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறையை நிறுத்துவதற்கான ஆரம்ப அறிகுறியாக நிபந்தனையுடன் கூடிய ஏற்பு இருப்பதாகவும், இதனால் நீடித்த அமைதியை அடைய இன்னும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் என்றும் முஹமட் ஹசான் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)