போர்ட் கிள்ளான், 03 அக்டோபர் (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தனது பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் தயாராக உள்ளது.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அந்த அனைத்துலக மாநாட்டிற்கு முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு நிலைமையை தமது தரப்பு தொடர்ந்து மதிப்பிடும் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறை, ஜே.கே.டி.என்.கே.ஏ-இன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
''அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உட்பட 34 நாடுகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நிச்சயமாக, போலீஸ் குறிப்பாக ஜே.கே.டி.என்.கே.ஏ தயார் நிலையை உறுதி செய்வதற்குப் பொறுப்பேற்கும். அனைத்து அம்சங்களிலும் பொது அமைதியிலும் கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வது எங்கள் பொறுப்பாகும்,'' என்றார் அவர்.
இன்று கடல்சார் காவல் படையின் 78-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்மி அபு செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டின் நுழைவாசல்களில் சுமூகமான செயல்பாடு மற்றும் உயர் மட்ட பாதுகாப்பு தயார்நிலையை உறுதி செய்வதற்காக, 10,492 பி.டி.ஆர்.எம் பணியாளர்களும் 3,000 குடிநுழைவுத் துறை பணியாளர்களும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முன்னதாக கூறியிருந்தார்.
47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு இம்மாதம் 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)