சிங்கப்பூர், 25 செப்டம்பர் (பெர்னாமா) - சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி உறுதிப்படுத்தியது.
தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனையை நிறுத்துவதாக முன்னதாக இன்று காலையில் சிறைத்தரப்பிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய தட்சிணாமூர்த்தியின் குடும்ப வழக்கறிஞர் என்.சுரேந்திரன், பிற்பகலில் மரண தண்டனையை நிறைவேற்றுவது உறுதி என்று அவர்கள் மீண்டும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது
அதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதியே தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நீதித்துறை சீராய்வு வழக்கு விசாரணையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதுடன் மேல் முறையீட்டின் போது சட்ட ஆலோசகர் ஒருவரும் அவருக்கு நியமிக்கப்பட்டதாக, ஓர் அறிக்கையில் சி.என்.பி கூறியிருந்தது.
மேலும், சிங்கப்பூர் அதிபரிடம் தட்சிணாமூர்த்தி, கருணை மனு தாக்கல் செய்திருந்தபோதும் அது தோல்வியடைந்ததாக சி.என்.பி தெரிவித்தது.
இந்நிலையில், இன்று நள்ளிரவு மணி 12.30க்கு மரண தண்டனையை ஒத்திவைப்பதாக கூறிவிட்டு அதே நாளில் பிற்பகல் மணி மூன்றுக்கு தட்சிணாமூர்த்தியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்திருப்பது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளதாக சுரேந்திரன் கூறினார்.
இவரைத் தவிர்த்து எஸ். சாமிநாதன், ஆர்.லிங்கேஸ்வரன், பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகிய மூன்று மலேசியர்களும் சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)