கோலாலம்பூர், 25 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படவிருக்கும் BUDI95 திட்டம் மலேசியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இத்திட்டம் தங்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதோடு, இந்த உதவித் தொகை தகுதியுடையவர்களைச் சென்றடைவதற்கான வியூக முயற்சியாகவும் கருதுவது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இந்த உதவித்தொகையை தகுதியுடையவர்கள் மட்டுமே பெறுவதை உறுதிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, மைகார்ட்டைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் தகுதியை உறுதிப்படுத்தி இந்த உதவியின் வழி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன்வழி, உதவித்தொகை விரயத்தையும் கட்டுப்படுத்தலாம் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
"பிரதமர் அல்லது இதை திட்டமிட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி. இந்த நிதி உதவி அனைத்து தகுதியான மலேசிய மக்களுக்கும் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு அல்ல. ஒரு மலேசியராய் நாம் அனைவரும் வரி செலுத்துகிறோம். எனவே, எங்களின் ஆதரவு முதலில் மலேசியர்களுக்கு. அதன் பின்னரே, பிறருக்கு. ஆகையால், இது மலேசியர்களுக்கு பயன்படும் வகையில் இருந்தால் எங்களுக்குத் திருப்தி," என்றார் முகமட் அர்ஷத் முகமட் இப்ராஹிம்.
"மைகார்டு அடையாள அட்டையை பயன்படுத்தி ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு பெட்ரோலை பெருவது நல்ல திட்டம். இதன்வழி எண்ணெய் விலை கசிவை தவிர்க்கலாம். ஆக, மலேசியர்கள் மட்டுமே இந்த உதவித் தொகையை பயன்படுத்த முடியும்," என்று யுஸ்யாய்ரி யுனுஸ் கூறினார்.
இத்திட்டம் தினசரி பயணம் மேற்கொள்ள போக்குவரத்தை சார்ந்திருப்பவர்களுக்கு குறிப்பாக தினமும் நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்கு மிகுந்த உதவியாக அமைவதோடு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களின் சுமையையும் குறைக்கும் என்று மக்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
"நான் வேலைக்கு தினமும் சுயமாகப் பயணிக்க வேண்டும். இதற்கு முன்பு 10 ரிங்கிட்டாக இருந்தது இனிமேல் குறைந்து எனது வாழ்க்கைச் செவினத்தை நெறிப்படுத்த உதவும். இதிலிருந்து சேமிக்கும் பணத்தை வேறு செலவிற்கு பயன்படுத்துவேன்," என்று உமி சுபைடா தெரிவித்தார்.
"இது ஒரு நல்ல திட்டம். எனக்கு பிடித்திருக்கின்றது. உணவு விநியோகிப்பாளர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் என்று பலருக்கு உதவியாக இருக்கும்," என்றார் புவனேஸ்வரி ஆறுமுகம்
"இந்த சூழ்நிலையில், நான் இத்திட்டத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, 'கிராப்' ஓட்டுனர்களுக்கு இது பெரிதும் கைகொடுக்கும்," என்று ஷமிருல் ஷமில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)