பாலிங், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- மக்களுக்கு விநியோகிக்கப்படும் ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, ஐ-சாரா-வை சில தரப்பினர் ஏளனம் செய்வதோடு, வழங்கப்படும் தொகையைச் சிறியதாகக் கருதினாலும், இன்னும் பல ஆசியான் நாடுகள் இம்முயற்சியை செயல்படுத்தவில்லை.
ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர்-உடன் கூடுதல் உதவி நிதியாக ஐ-சாரா வழங்கப்படுவதாகக் கூறிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், இது மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய நேரடி உதவி என்றும் குறிப்பிட்டார்.
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வியட்நாம் அண்மையில் தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 100,000 வியட்நாமிய டோங் அல்லது சுமார் 16 ரிங்கிட் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்ததாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
''வெளிநாடுகளில் உள்ள எனது நண்பர்களுடன், குறிப்பாக ஆசியான் தலைவர்களுடன் நான் கலந்துரையாடியபோது, மூன்று கோடியே 40 லட்சம் மக்கள் தொகை, 90 லட்சம் மக்களுக்கு வழங்க ஆயிரத்து 500 கோடி ரிங்கிட்டை நீங்கள் செலவிடுகிறீர்களா என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர், எங்களால் அதை செய்ய முடியாது என்று பதிலளித்தனர். அவர்கள் என்னிடம், அது எப்படி சாத்தியம் என்று கேட்டனர். நான், இந்த 100 ரிங்கிட் கடைசி என்று கூறினேன். மற்ற தேவைகளும் இருக்கின்றன. ஏனென்றால் எனக்குத் தெரியும். ஏன்? ஏனென்றால் பொருட்களின் விலை இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை,'' என்றார் அவர்.
சனிக்கிழமை கெடா, பாலிங்கில் நடைபெற்ற மடானி ரக்யாட் 2025 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் அவர் அவ்வாறு உரையாற்றினார்.
மக்களின் நலனை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ரொக்கப் பண உதவியால் மட்டும் அளவிட முடியாது.
மாறாக, எந்தவொரு குறைபாடுகளுக்கும் எதிராக செயல்படுவதில் அரசாங்கத்தின் தீர்மானம், உறுதிப்பாடு மற்றும் துணிவு மூலமும் மதிப்பிடப்படுவதாக அன்வார் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)