கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) - ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாராவின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை செலவிடுவதில் பொறுமை காக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்திய சமுதாயத்தினர் அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க அத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அச்சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சாராவின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அவசரப்பட்டு பயன்படுத்தாமல் தீபாவளி காலக்கட்டத்தில் பயன்படுத்தலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
"அதே காலக்கட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இரண்டு ஒரே காலக்கட்டமாக இருப்பதால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பயன்படுத்தாமல் அதற்கு பின்னரும் அல்லது முன்னதாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம், வரவு செலவுத் திட்டம் அறிவிப்பிற்குப் பின்னர் எந்தெந்தப் பொருட்களின் வரி அதிகரிக்கப்படுகிறது என்பது தெரியாது," என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தீபாவளிக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்களை குறிப்பாக சமையல் மற்றும் பலகாரங்கள் செய்வதற்கான பொருட்களை SARA-வின் கீழ் இணைப்பதற்கு அரசாங்கத்திடம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுக்கவிருப்பதாக சுப்பாராவ் கூறினார்.
இது தீபாவளி கொண்டாடுபவர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"அந்தப் பொருட்களின் பட்டியலை அரசாங்கத்திற்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சாரா உதவித் தொகையைப் பயன்படுத்த முடியுமா என்பதை நாம் யோசிக்கின்றோம். காரணம், இப்பொழுதே மாவு விலை அதிகரிப்பதற்கு சாத்தியம் உள்ளது. ஆகவே, அவற்றை சாரா உதவித் தொகையின் கீழ் வழங்கினால் நிச்சயமாக பல குடும்பங்களுக்கு குறிப்பாக பி40 குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்," என்றார் அவர்.
மேலும், உதவித் தொகையின் வழி வாங்கப்படும் பொருட்கள் என்று மெத்தனப்போக்குடன் இருந்துவிடாமல், அவற்றின் விலையை ஒப்பீட்டு பார்த்து வாங்க வேண்டும் என்று சுப்பாராவ் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமல்லாது, அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அல்லது வியாபாரிகள் குறித்து அரசாங்கத்திடம் புகார் அளிக்க மக்கள் தயங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, அந்த உதவித் தொகையை இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை பயன்படுத்த கால அவகாசம் இருப்பதால் அதனை விரையம் செய்யாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என்று பெர்னாமாவிற்கு வழங்கிய நேர்காணலின் வழி சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)