வட இந்தியா, 04 செப்டம்பர் (பெர்னாமா) -- வட இந்தியாவில், நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்த வேளையில், டெல்லி ஆற்றங்கரைப் பகுதிகளில் இருந்து சுமார் 10,000 பேர் மாற்று இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
அப்பகுதியில் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக பஞ்சாப் மாநில பேரிடர் மீட்புப் படை அதிகாரி மொஹிந்தர் பால் என்பவர் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அலை ஜம்மு, காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் வடக்குப் பகுதிகளை வெகுவாகப் பாதித்திருந்தது.
மேலும், செனாப் மற்றும் தாவி நதிகளின் நீர்மட்டம் பல இடங்களில் அபாய அளவைத் தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நிரம்பி வழியும் ஆறுகளால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், பல பாதைகளும் பெரிய அளவில் சேதமடைந்தன.
அவற்றுடன், ஜம்மு மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பல மலைப் பகுதிகள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டன.
இவ்வாண்டு பருவமழை இந்தியாவில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் வட இந்தியாவில் குறைந்தது 130 பேர் பலியான நிலையில், பல கிராமங்களின் உள்கட்டமைப்பும் முற்றாக சேதமாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)