பாலிங், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம், சாராவின் அமலாக்க செயல்முறையின் அடைவுநிலை தற்போது சீராக உள்ளது.
தொடக்கத்தில் இதனைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அவை களையப்பட்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இன்றுவரை, ஒன்று மட்டுமல்ல, ஏழு அல்லது எட்டு பரிவர்த்தனைகள், சுமூகமாக நடைபெற்றன. முதல் மற்றும் இரண்டாவது நாளில் மட்டுமே ஒரு சிறிய கோளாறு இருந்தது. ஆனால், இப்போது அது சீராக இயங்குவதாகத் தெரிகிறது. தற்போது பிரச்சனை இல்லை. கடந்த ஐந்து நாள்களாக எந்தவொரு புகாரும் இல்லை,'' என்றார் அவர்.
இச்செயல்முறையில் மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, எதிர்வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் SARA தொடர்பான முயற்சிகள் அல்லது கொள்கைகள் அறிவிக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே, பேரங்காடியில் மட்டும் SARA-வின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
மாறாக, புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளிலும் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)