ஜோகூர் பாரு, 10 ஜூலை (பெர்னாமா) -- 2025 MITSATOM எனப்படும் பலதரப்பு அணுசக்தி பாதுகாப்பைக் கண்டறியும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துகுள்ளான ஹெலிகாப்டரில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட போலீஸ் உறுப்பினர்கள் ஐவரில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதோடு அவர்களுக்கு சுவாச கருவியுன் உதவியும் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய மூவரின் நிலை சீராக இருக்கும் வேளையில் அவர்களுக்கு ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
''மொத்தம் ஐவர். ஆண்கள் மூவர் மற்றும் பெண்கள் இருவர். இருவருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. மூவர் நிலையாக உள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்றதில், கருப்புப் பெட்டிகள் போன்ற தகவல்களுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை நீரில் தேடும் முயற்சியில் சி.ஏ.ஏ.எம், ஏ.பி.எம்.எம் ஈடுபட்டுள்ளன,'' என்றார் அவர்.
SUPER: டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில்/ தேசிய போலீஸ் படைத் தலைவர்
பாதிக்கப்பட்ட ஐவருக்கும் மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அம்மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் கூறினார்.
அதில் மூவர் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-இன் விமானப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் எஞ்சிய இருவர் தஞ்சோங் குப்பாங் போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பி.டி.ஆர்.எம் கவனம் செலுத்தி வருவதாகவும் அதன் பின்னரே விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்றும் முஹமட் காலிட் தெரிவித்தார்.
''கருப்புப் பெட்டிகள் மற்றும் பலவற்றிலிருந்து வரும் தகவல்களுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். பல்வேறு தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என்றார் அவர்.
விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் மிகவும் பழமையான ஒன்று என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த அவர் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]