முக்கா , 07 ஜூலை (பெர்னாமா) -- சரவாக், கம்போங் பெலாவாய் அருகே பெலாவாய் நீரணையில் படகு ஒன்று மூழ்கி காணாமல் போனதாக கூறப்பட்ட சம்பவத்தில், மேலும் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இச்சம்வத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
இன்று, மூன்றாவது நாளாக தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், அவர்களது உடல்களை பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டெடுத்ததாக சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று காலை மணி 6.50 மணி தொடங்கி காலை மணி 7.50-க்குள் முவாரா பெலாவாய் பகுதியில் மூன்று உடல்களும், பெலாவாய் , சிம்பாங் சுங்கை பினாங் பகுதியில் ஓர் உடலையும் பொதுமக்கள் கண்டெடுத்தனர்.
மேலும், காலை மணி 8.30-க்கு முவாரா சுங்கை செலிமுட் பகுதியில் ஓர் உடலை சரவாக் கடற்படை போலீஸ் கண்டெடுத்தது.
ஐந்து உடல்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அரச மலேசிய போலீஸ் படை , மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம், பொது தற்காப்புப் படை மற்றும் சரவாக் பாதுகாப்பு மற்றும் அமலாக்க பிரிவு உட்பட உள்ளூர் சமூக உதவிகள் ஒத்துழைப்புடன் சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மேற்கொண்ட தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த சனிக்கிழமை கம்போங் பெலாவாய் மீன்பிடி படகுத் துறையில் இருந்து லாடாங் கெலாபா சோன் பெலிதாக்கு படகுத் துறைக்கு 17 இந்தோனேசிய பிரஜைகளை ஏற்றிச் சென்ற போது பிற்பகல் மணி 2.11 அளவில் படகு கவிழ்ந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)