புத்ராஜெயா, 01 ஜூலை (பெர்னாமா) -- மலேசியா, தற்போது 2026–2030 ஆசியான் இணைய பாதுகாப்பு வியூக ஒத்துழைப்பு திட்டத்துக்கான முன்முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அந்த கட்டமைப்பு, வட்டார இணைய மீள்தன்மையை கூட்டாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அது தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
இவ்வாண்டு ஆசியானுக்குத் தலைமையேற்றிருக்கும் மலேசியா, வட்டார திட்டங்களில் இணையப் பாதுகாப்பை முக்கியமான அங்கமாக வைத்திருப்பதாக, டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்பில் உலகளாவிய ஈடுபாட்டை வலுப்படுத்தும் நாட்டின் முயற்சிகளுக்கு ஏதுவாக இருப்பதோடு, சம்பந்தப்பட்ட இத்துறையில் வட்டார முன்னோடியாகவும் மலேசியாவின் பங்கு வலுப்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார்.
''அது தொடர்பாக, 2026–2030 ஆசியான் இணையப் பாதுகாப்பு வியூக ஒத்துழைப்பு வலியுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு திறன்கள் குறித்து, குறிப்பாக, சம்பவ பதிவு, இலக்கவியல் தடயவியல், பாதுகாப்பான தரவு பரிமாற்றம் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில்'', என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற 2025 இணையப் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போது, டாக்டர் அஹ்மாட் சாஹிட் அதனை கூறினார்.
ரகசியத்தன்மை, இறையாண்மை மற்றும் நம்பிக்கை ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொள்வதுடன், உணர்வுகள் மற்றும் எல்லை தாண்டிய இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்திச் செய்வதில், இந்த வழிமுறை அடித்தளமாக விளங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)