Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பேராக்கில் 'பன்ச்சாராகாம்' இசைக் குழுவை கொண்ட முதல் தமிழ்ப்பள்ளியாக கிளேபாங் தமிழ்ப்பள்ளி

25/05/2025 08:24 PM

ஈப்போ, 25 மே (பெர்னாமா) -- நாட்டில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகள் கல்வி, புத்தாக்கம், விளையாட்டு என பல துறைகளில் தங்களை ஈடுபடுத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து எட்டி வருகின்றன.

அவ்வகையில், தற்போது இசை துறையிலும் மிளிர்வதற்கான முதல் படியாக 'பன்ச்சாராகாம்' (PANCARAGAM) எனும் இசைக் குழுவை உருவாக்கியுள்ளது பேராக், கிளேபாங் தமிழ்ப்பள்ளி.

பேராக், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய 40,000 ரிங்கிட் நிதி உதவியின் மூலம் அந்த இசைக்குழுவுக்கான இசைக்கருவிகள் வாங்கப்பட்டதாக கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணசாமி முத்துசாமி கூறினார்.

இதன் மூலம் பேராக் மாநிலத்தில், 'பன்ச்சாராகாம்' இசைக் குழுவை கொண்ட முதல் தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை பெற்றிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இன்று, கிளேபாங் தமிழ்ப்பள்ளி திடலில் காலை மணி எட்டுக்கு தொடங்கிய அப்பள்ளியின் 71-ஆம் ஆண்டு திடல் தடப்போட்டி விளையாட்டில் இப்புதிய இசைக் குழுவின் அறிமுக விழா நடைபெற்றது.

45 மாணவர்களைக் கொண்டு இயங்கும் இந்த இசைக் குழுவைத் தவிர்த்து மேலும் பல புறப்பாட நடவடிக்கைகளை தங்கள் பள்ளி மேற்கொண்டு வருவதாகவும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

இசைத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அதில் ஈடுபடும் வாய்ப்பை இந்த இசைக்குழு வழங்கும் என்று ஆசிரியை வசந்தா சுப்ரமணியம் தெரிவித்தார்.

இசைக் கருவிகளைக் கொண்டு மாணவர்கள் வாசித்த தேசிய கீதம் வந்திருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததோடு பலரின் பாராட்டையும் பெற்றது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]