மலாக்கா, 06 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த ஞாயிற்றுக்கிழமை, போலீசைப் போன்று வேடமிட்டு வங்காளதேச ஆடவர் ஒருவர் மீது தமது அதிகாரத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக பாதுகாவலர் ஒருவருக்கு ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து மலாக்கா மஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தம் மீதான குற்றத்தை சாரில் இஸ்மாயில் என்பவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் ஷர்டா ஷின்ஹா முஹமட் சுலைமான் அத்தண்டனையை விதித்ததோடு, அபராதத்தை செலுத்தத் தவறினால் அந்நபர் ஐந்து மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
51 வயதான சாரில், இம்மாதம் முதலாம் தேதி பிற்பகல் மணி 2.54-க்கு மலாக்கா, ஜாலான் பெண்டஹராவில் அக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 170-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட வங்காளதேச ஆடவர் ஜாலான் பெண்டஹாராவில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது, கறுப்பு நிறத்திலான சட்டையும் காற்சட்டையும், நீல நிற தலைக்கவசமும் அணிந்திருந்த நபர் ஒருவர் அவரை அணுகி தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அவ்வாடவரின் பையைப் பரிசோதித்து, குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் அதிலிருந்த 720 ரிங்கிட்டை எடுத்து கொண்டுள்ளார்.
அவ்வாடவரின் செயலைச் சந்தேகித்த பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் புகார் செய்துள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]