கோலாலம்பூர், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் கடந்த இரண்டு நாள்களாக படிப்படியாக வீட்டு விடுப்புக்கு செல்வதற்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பைத் தொடர்வதற்காக மாலை நேரத்தில் அவர் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான, ஐ.ஜே.என்-க்கு திரும்ப வேண்டும்.
துன் மகாதீரின் உடல்நலம் சீரடைந்து வருவதாகவும், உடலியக்க மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சி குறித்து ஐ.ஜே.என் மருத்துவக் குழு முழு திருப்தி அடைந்துள்ளதாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், துன் மகாதீரின் பத்திரிக்கைச் செயலாளர் சுஃபி யூசோஃப் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும் ஐ.ஜே.என் மருத்துவக் குழுவின் நெருக்கமான கண்காணிப்பில் துன் டாக்டர் மகாதீர் தொடர்ந்து இருப்பார்.
குடும்ப உறவுகளைத் தவிர பார்வையாளர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
நூறு வயதுடைய நாட்டின் மூத்த அரசியல் தலைவரான துன் மகாதீர், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஶ்ரீ கெம்பாங்கான் தி மைன்சில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து ஐ.ஜே.என்-இல் அனுமதிக்கப்பட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]