பொது

காலுறை விவகாரம்; முழு விசாரணை நடவடிக்கை போலீசிடம் ஒப்படைப்பு

25/03/2024 07:01 PM

கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- பெட்டாலிங் ஜெயா, கேகே மார்ட் பல்பொருள் கடையில் 'அல்லாஹ்' என்ற வார்த்தை கொண்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பிலான முழு விசாரணையை அரசாங்கம் போலீசிடம் ஒப்படைத்துள்ளது.

காரணம், தனிப்பட்ட குழுவினரால் தீர்வு காணப்படக்கூடிய  பிரச்சினையாக இது இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.

"நான் முழு அனுமதி தருகிறேன். விசாரணை விவகாரங்களில் நான் தலையிட மாட்டேன் என்று டான் ஶ்ரீ ராசாவுக்கு நன்கு தெரியும். ஆனால் சமரசம் ஏதுமின்றி, நாட்டைத் தற்காத்து, சட்டத்திற்குப் புறம்பாக நடக்காமல் இருக்க உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் வலியுறுத்துகிறேன்," என்றார் அவர்.

இன்று காலை கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 217ஆவது போலீஸ் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃப்புடின் நசுத்தியோன் இஸ்மாயில், உள்துறை துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அனுவார் நசரா, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ முஹமட் சுக்கி அலி, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)