பொது

குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் திறன் பலகை பொருத்தப்பட்டது

15/12/2023 08:18 PM

குனோங் ராப்பாட், 15 டிசம்பர் (பெர்னாமா) -- பேராக், குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அப்பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் SMART BOARD எனப்படும் திறன் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்பறைகளிலும் திறன் பலகை பொருத்தப்பட்டு கணினி அறை, அறிவியல் அறை, நூல் நிலையம், திடல் வசதி உட்பட பல வசதிகள் கொண்ட முழுப் பள்ளியாக செயல்பட தொடங்கியுள்ளதாக அதன் தலைமையாசிரியர் ஜெயகுமார் சபாபதி தெரிவித்தார்.

''இப்பள்ளியில் ஆறு வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் அறை, தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு அறை போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியாக உருமாறி இருக்கின்றது. நவீன வசதிகளுடன் ஒவ்வொரு வகுப்பறையிலும் திறன் பலகையோடு கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது,'' என்றார் அவர்.

அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் எதிர்காலத்தில் இப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்புள்ளதாக இப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் எஸ். இளங்கோவன் கூறினார்.

''தற்போது இது ஒரு நவீன பள்ளி. கற்றலுக்கான அனைத்து வசிதிகளும் உள்ளன. எனவே, சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் அவர்.

இப்பள்ளியில் திறன் பலகைகளைப் பொருத்திய நிறுவனத்திற்குக் காசோலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பல அரசு சாரா இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்குச் செவிசாய்த்த மாநில அரசாங்கம் புதிய இடத்தை வழங்கிய நிலையில் மத்திய அரசாங்கத்தின் செலவில் இப்பள்ளி சகல வசதிகள் கொண்ட பள்ளியாக உருமாறியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கம் ஒதுக்கீடுச் செய்த சுமார் 70 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளியில் 128 மாணவர்கள் பயில்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)