பொது

மாணவர்களிடத்தில் நற்பண்புகளை விதைக்கும் வள்ளலார் மாநாடு

04/12/2023 08:16 PM

கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" எனும் தமது கொள்கையை உலகிற்கு உரக்க உரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாபெரும் மகானின் கொள்கைகளை சிறு பருவத்திலேயே மாணவர்களிடத்தில் விதைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இவ்விழாவிற்கு வள்ளலார் 200 மாணவர் மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியா மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முதன்முறையாக நடத்தப்படும் மாநாடாகவும் இது திகழ்கிறது. 

நாட்டில் 11 மாநிலங்களை உட்படுத்தி 528 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டு குழுத் தலைவர் அம்ரிஜித் கோர் ஜஸ்வான்ட் சிங் தெரிவித்தார். 

''வள்ளலார் கொள்கைகளைப் பரைசாற்றும் வண்ணம் தமிழ்நாட்டில் 52 வாரங்களாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, உலகில் முதன்முறையாக மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

இதன் மூலமாக, சமயக் கல்வியை மாணவர்களிடம் புகுத்தி, நன்நெறிப் பண்புகள் கொண்ட நாளைய தலைவர்களை உருவாக்க இந்த மாநாடு வழிவகுக்கும் என்று சுல்தான் இட்ரில் கல்வியியல் பல்கலைக்கழகம், உப்சியின் மூத்த விரிவுரையாளர் முனைவர் இளங்குமரன் சிவநாதன் கூறினார்.

இந்நிலையில், மாணவர்களுக்கான திருவருட்பா பாடல் போட்டி, சன்மார்க்கப் பேச்சுப் போட்டி போன்ற போட்டிகளின் முதல் சுற்று ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும் அதன் இறுதி சுற்றும் பரிசளிப்பு விழாவும் மாநாட்டின்போது இடம்பெறும் என்றும் அவர் விவரித்தார். 

''காலை ஒன்பது மணித் தொடங்கி மதியம் ஒரு மணி வரையில் இந்தப் போட்டிகள் நடைபெறும். அதே நேரத்தில் மாநாடும் தொடங்கியிருக்கும். மலேசியாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் வருவார்கள். இவர்களின் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்,'' என்றார் அவர்.

தமிழ்ப்பள்ளியில் பயிலாத மாணவர்கள் உட்பட வள்ளலார் 200 மாணவர் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் 011-11112680 எனும் எண்களில் உப்சி பல்கலைக்கழக வளர் தமிழ் மன்றத் தலைவர் ஜீவனாத் பிரகாஷை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரவாங், கல்வி, தன்முனைப்பு, ஒழுக்க மேம்பாட்டுச் சங்கம், உப்சி பல்கலைக்கழகம், மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் மற்றும் தமிழ்நாட்டின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகிறது.

டிசம்பர் பத்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சுல்தான் இட்ரில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் Auditorium Utama-வில் காலை ஒன்பது மணித் தொடங்கி நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 600-இல் இருந்து 800 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று காலை கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஏற்பாட்டு குழுத் தெரிவித்தது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]