பொது

குடியுரிமையின்றி நாடற்றப் பிரஜைகளாக வாழும் சபா இந்தியர்களின் அவலம்

14/11/2023 08:06 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- இன்னமும் குடியுரிமை இல்லாமல் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் பெரும்பாலான இந்தியர்கள் நாட்டில் இருக்கவே செய்கின்றனர்.

அதில் சபா மாநிலத்தில் உள்ள இந்தியர்களும் விதிவிலக்கல்ல.

பெலுரான் பாமோல் தோட்டம், சண்டாகானில் BATU 32 மற்றும் லாஹட் டத்து ஆகிய பகுதிகளில் சுமார் 200 இந்தியர்கள் குடியுரிமை இன்றி நாடற்ற பிரஜைகளாக வாழும் அவலம் நிகழ்கின்றது.

இனி வரக்கூடியத் தலைமுறையினரும் இதில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுக் காண வேண்டும் என்று சபா, லாஹட் டத்து, இந்திய சமுதாய அமைப்பு பெரிதும் எதிர்ப்பார்க்கின்றது.

கடந்த 1965-ஆம் ஆண்டில் மலேசிய குடியேற்ற நிதி வாரியம் மற்றும் சபா தொழிலாளர் உத்தரவு ஆணையின் ஒப்பந்தத்தின் கீழ் தீபகற்ப மலேசியாவிலிருந்து சுமார் பத்தாயிரம் இந்தியர்கள் சபா மாநிலத்திற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து சிலர் தீபகற்பத்திற்குத் திரும்பிய நிலையில் பெரும்பாலோர் அங்கேயே புலம்பெயர்ந்தனர்.

இதனிடையே, அதற்கு அடுத்த தலைமுறையினர் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா பிரஜைகளைப் திருமணம் புரிந்ததால் அவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமை இல்லாமல் தவித்து வருவதாக சபா, லாஹாட் டத்து, இந்திய சமுதாய அமைப்பின் தலைவர் டத்தோ நாகராஜூ அப்பளசாமி தெரிவித்தார்.

''அவர்களது பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. இதனால், அரசாங்கத்தில் இருந்து எந்தவொரு உதவியும் கிடைப்பதில்லை. அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது,'' என்றார் டத்தோ நாகராஜூ.

1996-ஆம் ஆண்டு, இந்த விவகாரம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அப்போதைய இந்திய அமைச்சர் மட்டுமல்லாது தற்போது அரசாங்கத்தில் இருக்கும் இந்திய அமைச்சர்களின் பார்வைக்கும் அது எடுத்துச் செல்லப்பட்டது.

அமைச்சர்கள் உதவுவதற்கு முன்வந்தாலும், அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் இந்த விவகாரம் இழுப்பறியானது.

தற்போது மனிதவள அமைச்சிடம் இப்பிரச்சனைக் குறித்து பேசியிருப்பதாகவும் கண்டிப்பாக தீர்வுக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் டத்தோ நாகராஜூ கூறினார்.

இதனிடையே, இந்தக் குடியுரிமை பிரச்சனை இல்லாத காரணத்தில் அங்குள்ள மக்கள் சமுகநல உதவிகளை பெருவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக, நான்காவது தலைமுறையினரின் கல்வி பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக லாஹாட் டத்து, இந்திய சமுதாய அமைப்பின் செயலாளர் முனைவர் ரிஷிகுமார் லோகநாதன் கூறினார்.

''சுமார் 150 மாணவர்கள் ஆரம்ப பள்ளி வரை மட்டுமே பயில முடிகின்றது. குடியுரிமை இல்லாததால் இடைநிலைப்பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதனால், அவர்கள் எதிர்காலம் பாதிக்கும்,'' என்றார் அவர்.

அதோடு, தங்களது அமைப்பின் மூலம் அங்குள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்தாலும், எதிர்காலத்திற்கு குடியுரிமை அவசியம் என்கின்றார் ரிஷிகுமார்.

எனவே, அங்குள்ள மக்கள் குடியுரிமை பெருவதற்கான தகுந்த ஆவணங்களையும் ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருக்கும் நிலையில், அரசாங்கம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய சமுதாய அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)