உலகம்

மெக்சிக்கோவில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன 43 மாணவர்களின் நிலைக் குறித்து மீண்டும் கேள்வி

19/08/2022 08:47 PM

மெக்சிக்கோ, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன 43 மாணவர்களின் நிலைக் குறித்து முன்னாள் அரசாங்கத்திடம் அந்நாட்டின் அதிகாரத்துவ தரப்பு மீண்டும் கேள்வி எழுப்பியது.

இத்தனை ஆண்டுகளாகியும், அம்மாணவர்கள் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இது ஒரு உயர்மட்ட மூடிமறைக்கும் நடவடிக்கை என்றும் அத்தரப்பு சாடியிருக்கிறது.

அம்மாணவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் இச்சம்பவத்தில் கடந்த அரசாங்கத்தின் பங்களிப்பு அரச குற்றமாக அமைந்திருப்பதாகவும் மெக்சிக்கோவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரி எலியன்ட்ரோ என்சினாஸ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

அதோடு, இச்சம்பவம் குறித்து அண்மைய விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு முன்னாள் அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

2014-ஆம் ஆண்டு தென்மேற்கு நகரமான Iguala-வில் காணாமல்போன மாணவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த மெக்சிக்கோ அதிபர் அண்ட்ரெஸ் மெனுவல் லோபெஸ் ஒப்ராடோர் உறுதியளித்தார்.

காணாமல்போன மாணவர்களின் குடும்பங்கள் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் நிலையில் அவர்களின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள போராட்டங்களின் மூலம் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]