Ad Banner
 பொது

தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை

03/02/2026 06:29 PM

செண்டாயான், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- அடுத்தாண்டு தொடங்கி, இரண்டு குழுக்களை உள்ளடக்கிய முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்பட விருப்பதைத் தொடர்ந்து பல அம்சங்களை உள்ளடக்கிய தயார்நிலை பணிகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அந்த முன்னேற்பாடுகளில் ஆசிரியர் நியமனம் முதன்மையாக உள்ள நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அங்கு பணிபுரிய விரைந்து விண்ணப்பிக்குமாறு தகுதி உடையவர்களுக்கு கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில், பி.ஐ.எஸ்.எம்.பி (P-I-S-M-P) எனப்படும் ஆசிரியர் பயிற்சி இளங்கலைப் பட்டப் படிப்பு திட்டத்தின் கீழ் பயில தகுதியுள்ள இந்திய மாணவர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்று தமது தரப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக வோங் கா வோ கூறினார். 

இதனால், தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப தங்கள் தரப்பு சிரமத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்த அவர், இவ்வாண்டு அதற்கான விண்ணப்பங்களை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

''சற்று முன்னர் எனது உரையில் நான் கூறியது போல தமிழ்ப்பள்ளிகளில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களையும், அதாவது பள்ளி மேலாளர் வாரியம் (எல்.பி.எஸ்), பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியில் அக்கறை உள்ள அனைவரும், ஆசிரியர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளும் விளம்பரத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சிற்கு உதவ வேண்டும். இளம் தலைமுறையினர் அதிகமானோர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு மக்களிடமிருந்து ஒத்துழைப்பை நான் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார் அவர். 

அதேவேளையில், அடுத்தாண்டிற்காக, கல்வி சேவை ஆணையத்தின் கீழ் சேவை ஒப்பந்த அடிப்படையில் 20,000 ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமிக்கவிருப்பதாக வோங் தெரிவித்தார். 

இதனிடையே, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இலக்கவியல் கல்வியிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கும், கணினிமயமாகி வரும் கல்வி சூழலில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனும் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் நாடு தழுவிய அளவில் உள்ள 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு, இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா பல்லூடக திறன் பலகைகளை வழங்கி வருகின்றது. 

அவ்வகையில், இன்று நெகிரி செம்பிலான், செண்டாயான் தமிழ்ப்பள்ளியில், அம்மாநிலத்தில் உள்ள 45 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களிடம், பல்லூடக திறன் பலகைகள் ஒப்படைக்கப்பட்டதாக மித்ராவின் கல்வி மற்றும் பயிற்சி பிரிவு இயக்குநர் முனைவர் ஜெயகுமரன் கோவில்பிள்ளை தெரிவித்தார். 

''இத்திட்டத்திற்கு முழுமையாக வாய்ப்பளித்த மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை இயக்குநர் பிரபாகரனின் ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கும் என்பது எங்கள் நம்பிக்கை,'' என்றார் அவர்.   

இதுவரை, சிலாங்கூர், பேராக் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா இப்பல்லூடக திறன் பலகைகளை வழங்கியுள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை