சிறப்புச் செய்தி

பிரிட்டனில் சொத்து நிறுவனத் துறையில் கால் பதித்திருக்கும் மலேசியர்

16/08/2022 08:25 PM

ரோம்ஃபோர்ட், 16 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவது மறுப்பதற்கில்லை.

இதுபோன்ற சூழ்நிலையிலும் உறுதியும், திடமானச் சிந்தனையும் இருந்தால், நினைத்த காரியத்தில் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் பொருளாதாரத் தாக்கத்தை எதிர்நோக்கி வரும் பிரிட்டனில், சொத்து நிறுவனத் துறையில் கால் பதித்திருக்கும் மலேசியாரான ரூபர்ட் ஜோன்ஸ்.

கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடிவெடுத்தது, கன்செர்வெடிவ் ஆளும் கட்சியில் அரசியல் நெருக்கடி ஆகியவற்றால், பொருளாதாரப் பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் பிரிட்டனில், மலேசியரான, ரூபர்ட் ஜோன்ஸ் தனது சொத்து நிறுவனமான ஹார்லி ஸ்ட்ரீட் எஸ்டேட் யூ.கே லிமிடெட் மூலம் முதலாவது வீடமைப்பு திட்டத்தை கடந்த சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

பிரிட்டனில் அதிகரித்து வரும், உள்நாட்டு வீடுகளுக்கான கோரிக்கைக்கு பங்களிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டில் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பே இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக சிலாங்கூர், அம்பாங்கைச் சேர்ந்த ரூபர்ட் ஜோன்ஸ் தெரிவித்தார்.

பெருந்தொற்றின்போது, கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறை, பொருட்களின் விலை ஏற்றம் உட்பட தங்கள் தரப்பு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியதாக கூறிய அவர், சரியான திட்டமிடல், பணிக்குழுவின் ஒத்துழைப்பு ஆகியவற்றினால் ஓராண்டு தாமதமானாலும் இத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்ததாக கூறினார்.

''நீங்கள் ஒரு திட்டத்தைத் தொடங்கினால், அதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும். உங்களுக்கு அதிகமான தொந்தரவுகள் வரும். ஆனால், அதையெல்லாம் கடந்து அத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி இருக்க வேண்டும். அதோடு, ஒரு நல்ல ஒரு குழு அமைய வேண்டும். அவ்வாறு அமைந்துவிட்டால் எளிதில் ஒரு மேம்பாட்டு திட்டத்தில் வெற்றி பெற முடியும்,'' என்கிறார் அவர்.

எஸ்-டி டெவலப்மெட்ன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனம் இம்முயற்சியில் ஈடுபட்டது.

லண்டன், ஹெவிரிங் நகராண்மைக் கழகத்தின் கீழுள்ள ரோம்ஃபோர்ட் நகரில், ‘’Team Mowbrays" என்ற பெயரில் 4 வீடுகளை உட்படுத்தி 23 லட்சத்து 50 ஆயிரம் பவுன்ட் ஸ்டெர்லிங், மொத்த மேம்பாட்டு மதிப்பு, ஜி.டி.வி-இல் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ரோம்ஃபோர்ட்டிலுள்ள மேலும் ஒரு பகுதியில் ஐந்து வீடுகளை உட்படுத்தி 35 லட்சம் பவுன்ட் ஸ்டெர்லிங் ஜி.டி.வி-இல் மேலும் ஒரு திட்டமும் தொடங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதோடு, மேலும் இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், தமது இந்த புதிய வீடமைப்பு திட்டத்தின் மூலம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி பவுன்ட் ஸ்டெர்லிங் மதிப்புடைய சொத்துக்களை உருவாக்க இலக்கு கொண்டுள்ளதாக ரூபர்ட் ஜோன்ஸ் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)