சிறப்புச் செய்தி

சிகரம் தொட்ட அனுபவத்தை மைஸ்கில் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார் இளங்கோவன்

06/08/2022 08:18 PM

சிலாங்கூர், 6 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உயர்ந்த லட்சியக் கனவு, மனதை ஒருநிலைப்படுத்துதல், சுயநம்பிக்கை ஆகியவையே வெற்றியின் திறவுகோலாகும்.

இம்மூன்றும் இருந்தால், எத்தகைய சோதனையாக இருந்தாலும் அதை சாதனையாக மாற்றக் கூடிய வலிமையும் வல்லமையும் தானாக கிடைக்கப்பெறும் என்கிறார் 64 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்த இளங்கோவன் நாச்சிமுத்து.

இன்று மைஸ்கில் அறவாரியத்தைச் சேர்ந்த மாணவர்களை இளங்கோவன் சந்தித்து கலந்துரையாடினார்.

சிகரம் தொட்டு சாதனைப் படைத்தது, வாழ்நாளில்  மறக்க முடியாத நெகிழ்ச்சியான  தருணம் என்றாலும், இந்த சாதனையைப் பெற தாம் எடுத்துக் கொண்ட சவால்களும் அதனால் தமக்கு கிடைத்த அனுபவங்களும் வார்த்தைகளில் அடங்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மலை ஏறுவதற்காக மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் விடைபெற்றுச் செல்லும்போது திரும்ப வருவோமா என்ற பதற்றம் தம்மை வாட்டி வதைத்தாலும், கனவை நனவாக்குவதற்காக எந்த எல்லை வரை செல்லவும் தாம் தயாராக இருந்ததால், இறுகிய மனதுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றதாக  இளங்கோவன் கூறினார்.

''ஏழாம் தேதி என் மனைவியை அழைத்து, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு பயணத்தைத் தொடங்குவதாக தெரிவித்தேன். மீண்டும் சந்திக்க முடியுமோ முடியாதோ என்ற உணர்வில் இருவருமே அழுது விட்டோம். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். 8ஆம் தேதி பயணத்தைத் தொடங்கி 14ஆம் தேதி வந்து சேரும் வரை தொடர்பு எதுவும் இல்லை,'' என்றார் அவர்.

தமது இந்த வெற்றிக்கு தயாரின் ஊக்குவிப்பும் இன்றியமையாதது என்று குறிப்பிட்ட இளங்கோவன், ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாட அவர் இப்போது இவ்வுலகில் இல்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மலையேறும் நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு தற்போது படிப்படியாக ஆர்வம் மேலோங்கினாலும், அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பும் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார். 

''இந்திய சமுதாயத்தைப் பொருத்தவரையில் மலையேறும் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது மிகக் குறைவு. ஆனால், தற்போது சற்று மாற்றத்தைக் காண முடிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும். பணம் இருந்தால்தான் முடியும். எவரெஸ்ட் மலையேறச் செல்வதற்கு முன்னரே நாங்கள் 40 ஆயிரம் ரிங்கிட் செலுத்தினோம்,'' என்று இளங்கோவன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இளைஞர்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையாக  விமர்சித்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து அவர்களின் திறமைக்கு ஏற்ப ஊக்குவித்தால் சாதனையாளர்கள் வரிசையில் அவர்களின் பெயரும் நிச்சயமாக இடம் பெறும் என்று மைஸ்கில் அறவாரியத்தின் தோற்றுநர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தெரிவித்தார்.

''இன்னும் 20 ஆண்டுகளில் மைஸ்கிலிலிருந்து ஒரு மாணவன் மலையேறச் செல்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த வகையில் ஏரியல் ஹைக்கர்ஸ் குழுவுடன் இணைந்து சில முயற்சிகளில் ஈடுபடவிருக்கிறோம். எங்கள் மாணவர்களுக்கும் மலையேறும் அனுபவம் உண்டு. எங்கள் மாணவர்களில் 10 பேர் கினாபாலு மலையேறச் சென்றனர். வானிலை காரணமாக உச்சத்தை அடைய முடியவில்லை. எனவே, ஏரியல் ஹைக்கர்ஸ் குழுவுடன் இணைந்து அக்கனவை நனவாக்குவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,'' என்று அவர் குறிப்பிட்டார்.

மலையேறும் நடவடிக்கையில் மைஸ்கில் மாணவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு அனைத்து வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக ஏரியல் ஹைக்கர்ஸ் மலையேறும் குழுவைச் சேர்ந்த கஜேந்திரன் சிதம்பரம்பிள்ளை கூறினார். 

''மைஸ்கில் அறவாரியத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் அவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறோம். எங்கள் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் 50 / 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். இளைஞர்கள் மிகவும் குறைவு. மைஸ்கில் அறவாரியத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ளதால் அவர்களைத் தத்தெடுத்து பயிற்சி அளிக்கவிருக்கிறோம்,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், களும்பாங்கிலுள்ள மைஸ்கில் அறவாரியத்தில் நடைபெற்ற இளங்கோவனுக்கான பாராட்டு நிகழ்ச்சியில், இதர மலைகளை ஏறி சாதனைப் படைத்தவர்களும் தங்களின் அனுபவங்களை அம்மாணவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களை ஊக்குவித்தனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)