கோலாலம்பூர், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- மாநில அரசாங்கங்கள் உடனான வியூக ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் அணுகுமுறையின் மூலம், குறிப்பாக நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் e-waste எனப்படும் மின்னணு கழிவுகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பதற்கான அமலாக்கத்தை மத்திய அரசாங்கம் வலுப்படுத்தும்.
எல்லை தாண்டிய பொருளாதார குற்றங்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் துறைமுகம் மற்றும் ஊராட்சித் துறை ஆகிய இரு முக்கிய நிலைகள் உட்படுத்தப்பட்டுள்ளதால் அதன் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியமானது என்று தேசிய தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
''இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று துறைமுகத்தில், ஏ.கே.பி.எஸ், பி.டி.ஆர்.எம் மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனெனில் அது துறைமுக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஆனால் சரக்கு புறப்பட்டதும், ஊராட்சித் துறையின் அதிகாரத்தின் நெறிகளை பின்பற்ற வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட தரப்புக்கு மாநகராண்மைக் கழகம், நகராண்மைக் கழகம் இணைந்து வளாக உரிமத்தை வழங்கும். எனவே எங்களிடம் உள்ள தகவலுடன், எந்த வளாகங்கள் விதிமுறைகளை மீறுகின்றன என்பதை கண்காணிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்,'' என்றார் அவர்.
முன்னதாக, நாடு முழுவதிலுமிருந்து அனைத்து மாநிலச் செயலாளர்களும் கலந்து கொண்ட 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொடர்புக் குழு கூட்டத்திற்கு ஷம்சுல் அஸ்ரி தலைமையேற்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)