உலகம்

புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் நிதியுதவி செய்யுங்கள் - மு.க.ஸ்டாலின்

13/05/2021 07:48 PM

சென்னை, 13 மே (பெர்னாமா) -- கொவிட்19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என்று அதன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திரட்டப்படும் இந்நிதி கொவிட்19 நோய்த் தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

''புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களைக் காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும். ஈகையும் இறக்கமும் கருணையும் பறந்த உள்ளமும் கொண்ட தமிழர்கள் அனைவரும் தமிழக அரசின் கொவிட் தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கும் வகையில் நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். இவை கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்,'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கொவிட்19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊடரங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொவிட்19 நச்சுயிரியினால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவ நிதி உதவி தேவைப்படுவதால், தமிழக அரசு நன்கொடைகளை எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

''நிதி உதவி குறித்த விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கிறேன். நீங்க அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலகும் அளிக்கப்படும்,'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதவி வழங்கியிருக்கும் அமெரிக்காவின் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம், வட அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகிய அமெரிக்காவின் சில முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் அமைப்புகளுக்கு ஸ்டாலின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா