Ad Banner
 சிறப்புச் செய்தி

சமய நிகழ்ச்சிகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆதரவு வழங்கும் - யுனேஸ்வரன்

25/01/2026 08:45 PM

கோலாலம்பூர், ஜனவரி 25 (பெர்னாமா) --  திருமுறை போன்ற சமய நிகழ்ச்சிகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு எப்போதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிகமாக ஏற்பாடு செய்வதன் வழி, நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அதன் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவிந்திருக்கிறார்.

''தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் அரசாங்கமும் இத்தகைய சமய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு எப்போதும் கொடுக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நிறைய செய்ய வேண்டும். வளரும் தலைமுறையினரிடமும் சமயத்தைப் பற்றி நிறையக் கற்றுக் கொடுக்க முடியும்,'' என்றார் அவர்.

நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸீல் சச்சிதானந்தா MUSICAL சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டின் திருமுறை இன்னிசை அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் யுனேஸ்வரன் ராமராஜ் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிகள் உட்பட மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் திருமுறை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை திருமுறை வகுப்புகளுக்கு அனுப்புவதன் வழி, அவர்கள் நல்ல பண்புகள் மட்டுமல்லாது ஆன்மீக விழிப்புணர்வையும் ஒழுங்கான நடத்தையையும் கற்றுக் கொள்ள வழிவகுக்கும்.

அதனைக் கருத்தில் கொண்டே 'திருமுறை எம் உரை முறை' எனும் கருப்பொருளில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சியின் இயக்குநர் முனைவர் விக்னேஸ்வரன் முனிக்கண்ணன் தெரிவித்தார்.

இந்த திருமுறை நிகழ்ச்சியில் ஆறு வயது குழந்தைகள் தொடங்கி ஆசிரியர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் உட்பட சுமார் 110 பேர் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தினர்.

இரவு 7.30 அளவில் தொடங்கியில் இந்நிகழ்ச்சியில் 600 பேர் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)