கினபாதாங்கான், 25 ஜனவரி (பெர்னாமா) -- நேற்று நடைபெற்ற கினபாதாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றுள்ளது.
ஶ்ரீ லாமாக் மண்டப்பத்தில் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட பின்னர் தேர்தல் நிர்வாக அதிகாரி டாக்டர் எடி ஷைசுல் ரிசாம் அப்துல்லா அம்முடிவை அறிவித்தார்.
கினபாதாங்கான் நாடாளுமன்றத்தில் மும்முனைப் போட்டி நிலவிய வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான முஹமட் குர்னியாவான் நயிம் மொக்தார், 14,214 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றதாக டாக்டர் எடி ஷைசுல் ரிசாம் கூறினார்.
"தேசிய முன்னணியைச் சேர்ந்த நைம் மொக்தார் 19,852 வாக்குகள் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளரான கோல்டம் ஹெச் சலங்காவிற்கு 946 வாக்குகள் கிடைத்த வேளையில், வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ சாடி அப்துல் ரஹ்மானுக்கு 5,638 வாக்குகள் கிடைத்திருந்தன. 369 செல்லா வாக்குகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆக மொத்தம் 14,214 பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன", என்றார் அவர்.
இதன்வழி, அம்னோ இளைஞர் அணியின் பொருளாளரான நயிம், மறைந்த தமது தந்தை டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினின் இடத்தைத் தக்க வைத்து கொண்டுள்ளார்.
இதனிடையே, லாமாக் சட்டமன்றத்தில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வாரிசானைச் சேர்ந்த மஸ்லிவாதி அப்துல் மாலேக்கை தோற்கடித்தார்.
"தேசிய முன்னணி வேட்பாளருக்கு 7,269 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து நேருக்கு நேர் களம் கண்டிருந்த வாரிசான் கட்சியைச் சேர்ந்த மஸ்லிவாத்தி அப்துல் மாலிக்கிற்கு 1,588 வாக்குகள் கிடைத்தன. இத்தேர்தலில் 160 செல்லா வாக்குகள் இருந்தன", என்றார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி, 66 வயதுடைய டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கினபாதாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத்தில் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)