சிறப்புச் செய்தி

TUHAN எனும் சொல் தொடர்பான விவகாரத்தில் DBP மெளனம் சாதிக்கக்கூடாது

29/04/2021 08:08 PM

கோலாலம்பூர், 29 ஏப்ரல் (பெர்னாமா) -- TUHAN என்ற சொல்லின் முதல் எழுத்தான T-க்கு வழங்கப்பட்டிருக்கும் விளக்கவுரை, இஸ்லாம் அல்லாதவர்களிடையே, கடந்த சில நாட்களாக, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து சமுதாயத் தலைவர்களும், கல்வியாளர்கள் பலரும் குரல் எழுப்பியும் கூட, DEWAN BAHASA DAN PUSTAKA DBP தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில், MEREDAH KABUS என்ற அந்த தேசிய மொழி சிறுகதை தொகுப்புக்கு படைப்புகளை வழங்கி மலாய் எழுத்துலகில் தனி முத்திரைப் பதித்து வரும் இந்திய எழுத்தாளர்கள் பெர்னாமாவிடம் தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர்.

MEREDAH KABUS என்ற தேசிய மொழி சிறுகதை தொகுப்பில் இஸ்லாமியர்கள் எழுதிய பகுதிகளில் TUHAN என்ற சொல்லில் முதல் எழுத்தான T பெரியதாகவும், இதர சமயத்தைச் சார்ந்தவர்கள் அதே சொல்லை எழுதியபோது TUHAN-னின் முதல் எழுத்து சிறியதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக மலாய் எழுத்து துறையில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, மலாய் இலக்கியத் துறைக்கு பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளார் தனுஷா ஷண்முகநாதன், MEREDAH KABUS என்ற இந்த சிறுகதை தொகுப்பிலும் MENGGAPAI BINTANG DI LANGIT மற்றும் CAHAYA DI HUJUNG TEROWONG என்ற சிறுகதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்ட இவ்விவகாரம் குறித்து, DBP கட்டாயம் தெளிவான விளக்கமளிக்கக்கூடிய கடப்பாட்டில் உள்ளதாக அவர் விவரித்தார்.

''அனைத்து இன மக்களின் வாழ்வாதாரமும் இந்நாட்டில் உறுதி செய்யப்பட்டு வரும் வேளையில், அவர்களின் கலை, கலாச்சாரம், தாய்மொழி ஆகிய உரிமைகளும் தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, இதே சிறுகதை தொகுப்பில் MANISNYA PERUBAHAN மற்றும் SEKALUNG MALAI UNTUK IBU என்ற தலைப்புகளில் சிறுகதைகளை எழுதிய மற்றோர் எழுத்தாளரானா அனுராதா செல்லையாவுக்கும் DBP-யின் இந்நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

''நாட்டின் தேசிய கோட்பாட்டில் இடம் பெற்றுள்ள, இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் முதல் கோட்பாட்டில் வரும் TUHAN என்ற சொல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களின் கடவுளுக்கும் பொருந்தும்'' என்று அவர் கூறினார்.

TUHAN என்ற சொல்லில் வரும் T பெரிய எழுத்தாக இருந்தால், அது குறிப்பிட்ட ஒரு சமயத்தின் இறைவனை குறிப்பதாகவும், அதே எழுத்து சிறியதாக இருந்தால், அது மற்ற சமயங்களின் இறைவனை குறிப்பதாகவும் DBP-யின் மின்னியல் அகராதியில் கூறப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

அதுமட்டுமின்றி, DBP-யின் இச்செயலினால், நாட்டின் தேசிய கோட்பாட்டில் இடம் பெற்றுள்ள, இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் முதல் கோட்பாட்டில் வரும் இறைவன் என்ற சொல், எந்த சமயத்தைக் குறிக்கிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாகவும் அனுராதா வருத்தம் தெரிவித்தார்.

இறைவன் என்பவர் அனைவருக்கும் சமமானவர் என்பதால், அனைத்து வேறுபாடுகளையும் கலைந்து இதற்கு விரைவில் தீர்வுக் காணப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

-- பெர்னாமா