பொது

இயங்கலை வாயிலாக அறிவியல் புத்தாக்கப் போட்டிகள்

22/11/2020 07:52 PM

சிலாங்கூர், 22 நவம்பர் (பெர்னாமா)-- கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகப் புதிய இயல்பில் இயங்குவதற்கு மக்கள் பழகி வருகின்றனர். இதற்கு மாணவர்களும் விதிவிலக்கல்ல.

கொவிட்19 நோய் பரவலுக்கு முன்பு, நேரடியாக நடத்தப்பட்ட அறிவியல் புத்தாக்க போட்டிகள் தற்போது இயங்கலையில் மேற்கொள்ளப்பட்டு வருவது, மாணவர்களுக்கும் மட்டுமின்றி, ஏற்பாட்டாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இவ்வாண்டு பல்வேறு புதிய பரிணாமங்களுடன் 'இல் இருப்பு அறிவியல்' என்ற கருப்பொருளில், இயங்கலையில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி போட்டிகளில் சுமார் 195 தமிழ்ப்பள்ளிகள், இதுவரை பங்கெடுத்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளரான அஸ்தி அமைப்பு கூறுகிறது.

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட அறிவியல் கண்காட்சி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பல சவால்களுக்கிடையில் தங்களின் படைப்புகளைக் காணொளி வாயிலாகப் பதிவு செய்து அனுப்பியதாக 2020-ஆம் ஆண்டு இளம் அறிவியல் ஆய்வாளர்களுக்கான கண்காட்சி இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் நடைபெற்ற நாடு தளுவிய நிலையிலான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கு கொண்ட மற்றொரு அறிவியல் கண்காட்சி போட்டிக்கும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 293 தமிழ்ப்பள்ளிகள் பங்கெடுத்து அதிக வரவேற்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது அஸ்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிக்கு 100 தமிழ்ப்பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியின் ஓர் அங்கமான ஐடெக்ஸ் அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்புப் போட்டியில், கோலாலம்பூர், தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி ஐந்து தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கமும், சிலாங்கூர், பத்துகேவ்ஸ் தமிழ்ப்பள்ளி நான்கு தங்கப் பதக்கமும், சிலாங்கூர், லாடாங் ஈபுர் தமிழ்ப்பள்ளி மூன்று தங்கப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கமும், சிலாங்கூர், தாமான் துன் சம்பந்தன் மற்றும் கோலாலம்பூர் பிளெட்சர் தமிழ்ப்பள்ளி ஒரு தங்கப் பதக்கமும் மற்றும் பினாங்கு, பெர்மாத்தா திங்கி தமிழ்ப்பள்ளி ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளன.

இந்த அறிவியல் கண்காட்சி போட்டி மென்மேலும் வளர்ச்சியடைய மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் ஆசிரியர்களுக்கு இராமனுஜம் விருதும் வழங்கப்படுகிறது.

-- பெர்னாமா