அரசியல்

அமைச்சரவையில் மாற்றமா?

19/10/2020 02:53 PM

கோலாலம்பூர், 18 அக்டோபர் (பெர்னாமா) -- பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக அம்னோ பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என ஆருடங்கள் வலுத்து வருகிறது. 

புதிய அமைச்சரவையில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில்  39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய கட்சியாக அம்னோ விளங்குகிறது.

ஆயினும், நடப்பு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுகள்  வழங்கப்படவில்லை என அம்னோ ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றது. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்சத்து கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை, அம்னோ மீட்டுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், அமைச்சரைவில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடும். 

குறிப்பாக, துணைப் பிரதமர் பதவிக்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்பட்டால், நாட்டில் முதன் முறையாக இரு துணைப் பிரதமர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள்.

அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா