Tuesday, 20 Oct 2020
அரசியல்
16/10/2020 11:08 AM

கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) -- பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாது, தனக்கு அப்படி ஒரு ஆதரவு இருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராயிம் பொய்யுரைக்க ஒரு போதும் வாய்ப்பில்லை.

அப்படி பொய்யுரைப்பது, அரசியல்  தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.  அப்படி செய்வதற்கான இக்கட்டான நிர்ப்பந்தத்திலும் அன்வார் இப்ராஹிம் இல்லை.

மான்னரை சந்தித்து திரும்பியுள்ள அன்வார் உற்சாகமாகக் காணப்படுகிறார். ஆளும் பெரிக்காத்தான் நேஷனலிலிருந்து விலகப் போவதாகவும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அம்னோ பகிரங்க எச்சரிக்கையும் விடுத்து விட்டது.

அம்னோவின் இந்த அதிரடி நடவடிக்கை அன்வாரின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. இனி நடக்கப் போவது ஆட்சி மாற்றமா? நடந்தால் அது சுமுகமாக நடந்தாக வேண்டும்.

அரசியல் சதுரங்கத்தில் அன்வார் மிகச் சாதுரியமாக நகர்த்தும் காய்களை உலகமே மிகக் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நடப்பு பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினுக்கு ஆதரவு இல்லை என்பதை எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் நவம்பர் 2-ஆம் தேதி கூடி 27 நாட்களுக்கு நடைபெறும். அம்னோவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 30 பேர் அன்வார்  இப்ராஹிமுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மொத்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அன்வாருக்கு ஆதரவளித்தால் கூட பெரும்பான்மையை அன்வார் பெற்றுவிடுவார். அன்வாரின் கைவசம் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வந்துவிட்டன. அவரது பட்டியலில் யார் யார் உள்ளனர் என்பதும் சிதம்பர இரகசியமாகவே இருந்து வருகிறது.

தமக்கு ஆதரவு அளிக்கும்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுவிட்டால், அவர்களை எவரேனும் விலை கொடுத்து வாங்கிடலாம் அல்லது மறைமுக அழுத்தங்களைத் தரலாம் என்பதால் அன்வார் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எழுத்து: எம்.விவேகானந்தன்

எழுத்தாளர் சுமார் 30 ஆண்டுகள் பல்வேறு நிலையிலான அரசாங்க பணிகளில் பணியாற்றியுள்ளார். ஆங்கில ஊடகங்களிலும் இவரது அரசியல் கண்ணோட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாகும். பெர்னாமாவின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை

-- பெர்னாமா

 

 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க