வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

16/09/2020 07:58 PM

வாஷிங்டன் டிசி , 16 செப்டம்பர் (பெர்னாமா) -- சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தக்காளி, கணினி உபகரணங்கள் உள்ளிட்ட ஐந்து பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு அதிபர் டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோயினால் பல உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதற்கு அந்நாடே பொருப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வரும் வேளையில் சீனாவின் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடை அவ்விருநாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் மோசமடையச் செய்துள்ளது. 

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு சிற்றரசு-இஸ்ரேல் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஐக்கிய அரபு சிற்றரசு - இஸ்ரேல் - பஹ்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

சீனா 

ஜிலின் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடல் பகுதியில், சீனா தனது இரண்டாவது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக ஒன்பது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெனீவா, சுவிட்சர்லாந்து  

கொவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகமாக பதிவுசெய்யப்படும் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கப்படுவது உறுதிச்செய்யப்பட வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. பல நாடுகளில், கொவிட்-19 நோயினால் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு கூறியிருக்கிறது. 

ஒரெகன், அமெரிக்கா 

ஆகஸ்ட் மாதம் தொடங்கி அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஒரெகன் மாநிலங்களில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீயினால் இதுவரை 25 பேர் பலியாகியிருக்கின்றனர். அண்மையில், தீயினால் சேதமடைந்த குடியிருப்பு பகுதிகளை ஒளிப்பதிவு செய்த காணொளி ஒன்றை அதிகாரிகள் தற்போது வெளியிட்டிருக்கின்றனர். 

--பெர்னாமா