தெஹ்ரான், 28 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான எந்தவோர் உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் செயெட் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் ஈரானின் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அது அமையும் என்றும் நேர்காணல் ஒன்றில் அராக்ச்சி கூறினார்.
''இல்லை. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு தற்போது எந்த உடன்பாடும் இல்லை. நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். எந்த நியமனமும் செய்யப்படவில்லை. எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து நாங்கள் இன்னும் பேசவில்லை,'' என்றார் அவர்.
இஸ்ரேலுடன் ஏற்பட்ட 12 நாள்கள் மோதலினால் ஏற்பட்ட சேதம் தீவிரமானது என்று கூறிய அவர் ஈரான் அணுசக்தி அமைப்பின் நிபுணர்கள் அது தொடர்பிலான விரிவான மதிப்பீட்டை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, அடுத்த வாரம் ஈரானுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய மறுநாள், அந்நாடு ஈரானுடன் எந்த சந்திப்பையும் இதுவரை திட்டமிடவில்லை என்பதை வெள்ளை மாளிகை பேச்சாளர் கெரலின் லீவிட் உறுதிபடுத்தினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]