அரசியல்

10 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையை நஜிப் செலுத்தினார்

29/07/2020 05:59 PM

கோலாலம்பூர், 29 ஜூலை (பெர்னாமா) -- நேற்று தமக்கு விதிக்கப்பட்ட கூடுதல் ஜாமின் தொகையான 10 லட்சம் ரிங்கிட்டை செலுத்துவதற்காக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று பிற்பகல் 1 மணிக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்தடைந்தார். 

நீதிமன்ற வளாகத்தின் பின் வாசல் வழியாக நஜீப் நுழைந்ததால், அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களால் தொடக்கத்தில் அவரை அடையாளம் காண முடியாமல் போனது. 

நஜீப்பின் வருகைக்குப் பின்னர், அவரின் இளைய மகனும், தமது தந்தைக்கு உத்தரவாதமளித்திருக்கும் நோராஷ்மான் நஜிப் உயர்நீதிமன்றத்தின் குற்றவியல் பதிவு முகப்பிற்குச் சென்று அத்தொகையைச் செலுத்தியிருக்கிறார். 30 நிமிடங்களுக்குப் பின்னர், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப், தமது ஆதரவாளர்களுடன், நீதிமன்றத்தின் பிரதான வாசல் வழியாக வெளியேறுவதைக் காண முடிந்தது. 

எஸ்.ஆர்.சி. இண்டர்நெஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான, 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை உட்படுத்திய ஊழல் வழக்கில், நம்பிக்கை மோசடி, கள்ளப்பணம் பரிமாற்றம் மற்றும் அதிகார மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில், 67 வயதுடைய நஜிப் குற்றவாளி என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. 

அவருக்கு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரதமராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்கு 12 ஆண்டுகளும், மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிற்கு தலா 10 ஆண்டுகளும், மூன்று கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுமாக மொத்தம் 72 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தன. 

இருப்பினும், அந்த ஏழு குற்றச்சாட்டுகளின் தண்டனைக்காலம் ஏகக் காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் நீதிபதி முஹமட் நஸ்லான் முஹமட் கசாலி அறிவித்திருந்தார். 

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், வழங்கப்பட்ட தண்டனையை ஒத்தி வைப்பதற்கான மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்வதற்கான சூழலை, எதிர் தரப்பினர் நிரூபித்ததைத் தொடர்ந்து, நீதிபதி அதற்கு அனுமதி வழங்கி ஜாமின் தொகையை 20 லட்சமாக அதிகரித்து, இரு நபர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 

நேற்று, 10 லட்சம் ரிங்கிட் ஜாமின் தொகையைச் செலுத்திய நஜீப், எஞ்சிய கூடுதல் தொகையான 10 லட்சத்தை இன்று புதன்கிழமை செலுத்தினார். 

-- பெர்னாமா