என்.யூ.தி.பி: பள்ளித் தவணைக்கான அட்டவணை மாற்றங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும்

24/06/2020 07:29 PM

கோலாலம்பூர், 24 ஜூன் (பெர்னாமா) --  பள்ளித் தவணைக்கான அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யவிருப்பதாக அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, பல்வேறு தரப்புகளில் இருந்து பல புகார்கள் எழுந்துள்ளதால், அம்முடிவை பரிசீலிக்குமாறு, என்.யூ.தி.பி எனப்படும் தீபகற்ப மலேசியாவின் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. 

எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுகள் நடத்துவதோடு அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் பரிசீலித்திருக்க வேண்டும் என்று அதன் தலைவர், அமினுடின் அவாங் சாடியிருக்கிறார். 

ஏனெனில், இம்முடிவு பள்ளி தரப்பினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை உட்படுத்தியிருப்பதால், அவர்களின் கருத்துகளையும் பரிசீலித்திருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகின்றார். 

பள்ளி தவணை விடுமுறை குறைக்கப்பட்டால், மாணவர்கள் நீண்ட பள்ளி தவணையை எதிர்நோக்கக்கூடும். 

அதனால், மாணவர்களுக்கு எளிதில் சலிப்புத்தன்மை ஏற்படுவதோடு, அவர்களின் கல்வி அடைவுநிலையிலும் சுணக்கம் ஏற்படும் என்றும் அமினுடின் தெரிவித்தார். 

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில், இயங்கலை வழியாக ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு, அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

புதன்கிழமை, பெர்னாமா தொலைக்காட்சி, அவரை தொடர்புக் கொண்டபோது, அமினுடின் இவ்வாறு கருத்துரைத்தார். 

-- பெர்னாமா