விளையாட்டு

2020 ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

25/03/2020 07:49 PM

தோக்கியோ, 25 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் தோக்கியோவில் நடைபெறவிருந்த, 2020 ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கனடா, ஆஸ்திரேலியா இப்போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகி கொண்டதை தொடர்ந்து, மற்ற நாடுகளும் விலகிக் கொள்ளவதற்கான அச்சம் எழுந்ததால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக, அனைத்துலக ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.

உள்நாட்டில் மட்டுமே, முன்னூறு கோடி டாலர் மதிப்பிலான ஆதரவாளர் நிதியை ஜப்பான் பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக, இதுவரை 1200 கோடி டாலரையும் ஜப்பான் செலவுச் செய்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை எந்தத் தடையுமின்றி திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தது. கிருமித்தொற்றால் உலகில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் 2020 ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க, பல தரப்புகள் நெருக்குதல் அளித்து வந்தன. 

உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. 

-- பெர்னாமா